வேதாத்திரி மகரிஷி அருட்காப்பு அதன் விளக்கம்!

 அருட்காப்பு 

"அருட்பேராற்றல் இரவும் பகலும், எல்லா நேரங்களிலும், எல்லா இடங்களிலும், எல்லாத் தொழில்களிலும், உறுதுணையாகவும், பாதுகாப்பாகவும், வழிநடத்துவதாகவும் அமையுமாக". 

விளக்கம் 

அருட்பேராற்றல் எங்கும் நிறைந்ததாக இருந்தாலும், அது ஓரிடத்தில் தேங்கியும், அந்த இடத்தை விட்டு விலகாமலும் இருக்க, அத்தூய காந்த ஆற்றல் பாதுகாப்பு வளையமாக அமையட்டும் என்று எண்ணத்தால் அருட்காப்பு கொடுத்து, பயன்களை அடைவது பலர் அனுபவத்தில் கண்டு, கையாளும் வழக்கம் ஆகும்.


எந்த நோக்கத்தைச் சேர்த்து இந்தக் காப்பைக் கொடுக்கிறோமோ அதற்கேற்ற பயன் விளையும். நாம் எடுத்த காரியத்தில் முயற்சியையும், வெற்றியையும் அது கூட்டுவிக்கும். இதனால் உயிர் ஆற்றலின் விரயம் தடுக்கப்படுகிறது. சக்திப் பெருகிக் கொண்டே போகிறது. 

நாம் எடுத்துக் கொண்டுள்ள நோக்கம் தடங்கலின்றி நிறைவேறுகிறது.இரவில் படுக்கப் போகும் போது இந்த அருட்காப்பை நம்மைச் சுற்றிலும், நம் வீட்டைச் சுற்றிலும் போட்டுக் கொள்ளலாம். தூக்கத்தின் போது நமக்கோ, இல்லத்திற்கோ எந்தத் தீங்கும் ஏற்படாது.

வாகனங்களில் பயணம் செய்கின்ற போது இந்தக் காப்பை அந்த வாகனத்தைச் சுற்றிலும் போட்டுக் கொண்டால், விபத்தில்லாமல் பயணம் நடைபெறும். பயணம் மேற் கொள்ள இருக்கின்ற உறவினர்களுக்கோ, நண்பர்களுக்கோ, அவர்கள் விடை பெறுகின்ற போது அவர்களைச் சுற்றிலும் அருட்காப்புப் போட்டு அனுப்பலாம். நலமுடன் ஊர் போய்ச் சேர்வார்கள்.

வாழ்த்தும் பயனும் பெரியவர்களாக இருந்தால் மௌனமாக அருட்காப்பைச் சொல்வது நலம். சிறியவர்களாக இருந்தால் நேரிடையாகச் சொல்லி அனுப்பி வைக்கலாம். இன்னும் எத்தனையோ விதங்களில் இந்த அருட்காப்பை உணர்வாளர்கள் பயன்படுத்திப் பலன் காணலாம்.

இதைத் தனக்குத் தானேயும் போட்டுக் கொள்ளலாம்.புகழுக்காகவோ, பணத்திற்காகவோ இவ்வருட்காப்பினை மற்றவர்க்கு அளிக்கக் கூடாது. உயிர்க்கு உதவியாக, ஒரு கருணைச் செயலாக உள்ளம் உவந்து அருட்காப்பிட வேண்டும்.



No comments